'யார் எம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய விடயம் ஒன்றை உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கத்தக்கதாகும்'...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'யார் எம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய விடயம் ஒன்றை உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கத்தக்கதாகும்' (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). மற்றுமொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : 'நம்முடைய விடயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது நிராகரிக்கப்படும்'.
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் இந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு காரியத்தை கண்டுபிடித்து உருவாக்குகிறாரோ அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தராத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப் படுவதோடு அல்லாஹ்விடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெளிவு படுத்துகிறார்கள்.
Hadeeth benefits
வணக்கங்கள் யாவும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அல்லாஹ்வை அவன் மார்க்கமாக விதித்ததன் அடிப்படையிலேயே வணங்குதல் வேண்டும். மாறாக புதுமைகள், நூதன அனுஷ்டானங்கள் மூலம் அவனை வணங்குதல் கூடாது.
மார்க்கம் மனித கருத்தை வைத்தோ, மக்கள் நல்லதாகக் கருதுவதை வைத்தோ தீர்மானிக்கப் படமாட்டாது. மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றுவதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது.
இஸ்லாம் பரிபூரணமான மார்க்கமாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
பித்அத் என்பது அகீதா அல்லது சொல் மற்றும் செயல் சார்ந்த விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலோ, அவர்களின் தோழர்களின் காலத்திலோ இல்லாத மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தையும் குறிக்கும்.
இந்த ஹதீஸ் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். அத்துடன் அமல்களை அளவிடும் அளவுகோளுமாகும். எந்த ஒரு அமலாக இருப்பினும் அவை அல்லாஹ்வுக்கென்ற தூய நோக்கமின்றி செய்யப்படுமாயின், அதனை செய்பவருக்கு எந்த கூலியும் கிடைக்காது. அதே போன்று அல்லாஹ்வின் தூதர் கொண்டு வந்ததற்கிணங்க எந்த செயலும் அமையப் பெறவில்லையாயின் அந்த செயல் ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட நூதன அனுஷ்டானங்கள் என்பவை மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப் பட்டவற்றைக் குறிக்குமே தவிர உலகியல் சார்விடயங்களைக் குறிக்காது.
Share
Use the QR code to easily share the message of Islam with others